மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை
6/23/2017 3:26:06 PM
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு, புது நகர் அருகே தனியார் சிமென்ட் தொழிற்சாலை காம்பவுன்ட் அருகே உள்ள முட்புதரில் இன்று மதியம் 11 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாலிபரின் சடலத்தை போலீசார் சோதனை செய்ததில், அவரது கை மற்றும் உடல் பகுதியில் பச்சை குத்திய இடங்களில் எல்லாம் தீயினால் சூடு வைத்து அழிக்கப்பட்டு இருந்தது. முட்புதரில் ரத்த வெள்ளம் காய்ந்த நிலையில் கிடந்தது. மேலும், அவர் கத்தியால் கழுத்தில் கொடூரமாக அறுக்கப்பட்ட நிலையில், தலை தனியே தொங்கியது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களும் ரத்தம் காய்ந்த நிலையில் காணப்பட்டன. அந்த வாலிபர் சிமென்ட் கலர் பேன்ட்டும், சந்தன கலர் சட்டையும் அணிந்துள்ளார். அவரை மினி லாரியில் ஏற்றி வந்த அடையாளங்கள் உடலில் ஆங்காங்கே காணப்பட்டன. அவரை வேறு எங்கேனும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வேனில் ஏற்றி வந்து இங்கு போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.