பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது
6/19/2017 3:24:13 PM
திருவனந்தபுரம்: குமரி - கேரள எல்லையான அமரவிளையில் கேரள அரசின் சோதனை சாவடி உள்ளது. நேற்று காலை இந்த சோதனை சாவடி வழியாக பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அமரவிளையில் உள்ள சோதனை சாவடியில் தனியார் பஸ்சை நிறுத்தி வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஸ்சில் கானா நாட்டை சேர்ந்த ஒரு வாலிபரும் இருந்தார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்தனர். அப்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கரன்சிகள் (பவுண்டுகள்) கட்டுக்கட்டாக இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் கையில் சிக்கிய இங்கிலாந்து பணத்தின் இந்திய மதிப்பு ரூ.82.35 லட்சம் ஆகும். மேலும் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த வாலிபர் கானா நாட்டை சேர்ந்த ராப் எடிசன் (41) என்பது தெரியவந்தது. இந்த கரன்சிகளை வேறு ஒருவரிடம் கொடுப்பதற்காக செல்வதாகவும், தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். பின்னர் வணிகத்துறை அதிகாரிகள் ராப் எடிசனை பாறசாலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.