தாழம்பூரில் உறவினரை மிரட்டியவர்களை தட்டி கேட்டவர் கொலை: 4 பேருக்கு வலை
6/19/2017 3:17:36 PM
திருப்போரூர்: சென்னை புறநகர் நாவலூரை அடுத்த தாழம்பூர், சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (45). இவரது அண்ணன் துலுக்காணம் (48), நாவலூர் பகுதியில் வசித்து வந்தார். திருப்போரூரை அடுத்த மானாம்பதி, சந்தனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கமலகண்ணன் என்பவருக்கு துலுக்காணத்தின் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்நிலையில், கமலின் மனைவிக்கு குழந்தை பிறந்திருந்ததால், தனது தாய் வீடான நாவலூரில் தங்கியிருந்தார். மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக, கமல கண்ணனும் அவரது உறவினர் விஷ்ணு என்பவரும் நாவலூர் வந்திருந்தனர்.
இதையடுத்து, தாழம்பூரில் உள்ள கஜேந்திரனின் வீட்டுக்கு, விஷ்ணு தனிப்பட்ட முறையில் கிளம்பி சென்று, அவரது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் தனியாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த உள்ளூர் இளைஞர்கள் நீலகண்டன், கார்த்திக், மணி உள்ளிட்டோர், விஷ்ணுவிடம் ‘எங்கள் ஊர் பெண்ணிடம் ஏன் தனியாக பேசுகிறாய்?’ என தகராறில் ஈடுபட்டுள்ளனர். இப்பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தான் காதலித்த பெண்ணிடம் மற்றொருவர் பேசியதை பார்த்து அசோக்குமார் தரப்புக்கும் விஷ்ணுவுக்கும் மோதல் ஏற்பட்டது. மற்றொரு தரப்பினர் விஷ்ணுவை சரமாரியாக அடித்து உதைத்து, அவரது மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டனர். இதுகுறித்து குறித்து கஜேந்திரனிடம் சென்று விஷ்ணு கூறினார்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களிடம் கஜேந்திரன் சென்று, விஷ்ணுவிடம் தகராறு செய்தவர்களை எச்சரித்து கடுமையாகத் திட்டிவிட்டு, விஷ்ணுவின் மோட்டார் சைக்கிளை மீட்டு வந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை நாவலூரில் வசிக்கும் தனது சகோதரர் துலுக்காணத்திடம், ‘உங்கள் மருமகனின் உறவினர் விஷ்ணுவால் இங்கு சிறிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவரை தனியாக அனுப்பினால் சரிவராது, எனவே, உங்களது மருமகன் கமலகண்ணனை அனுப்பி வையுங்கள்’ என்று கஜேந்திரன் சொல்லியிருக்கிறார்.
அதன்படி, தாழம்பூரில் உள்ள கஜேந்திரன் வீட்டுக்கு கமலகண்ணன் வந்து, அந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நாவலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நடுவழியில் அவரை மடக்கிய சிலர், ‘இந்த மோட்டார் சைக்கிள் யாருடையது, நீங்கள் ஏன் எடுத்துச் செல்கிறீர்கள்?’ என கேட்டு தகராறு செய்துள்ளனர். அவர்கள் நடந்த சம்பவங்களை கமலகண்ணனிடம் கூறி, ‘எங்களிடம் உங்கள் சின்ன மாமனார் தகராறு செய்துள்ளார், எங்களை அவமானப்படுத்திவிட்டு, இந்த வண்டியை பிடுங்கி சென்றுள்ளார். அவரை வந்து வாங்கிக்கொள்ள சொல்லுங்கள்’ என்று அக்கும்பல் கூறியுள்ளது.
இதையடுத்து தனது சின்ன மாமனார் கஜேந்திரனுக்கு கமல் தகவல் கொடுத்துள்ளார். கஜேந்திரன் பைக்கில் வந்ததும், அங்கு மறைந்திருந்த சிலர் கஜேந்திரனை கழுத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கஜேந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி, செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், கஜேந்திரனை அதே ஊரைச் சேர்ந்த சபாபதி, நீலகண்டன், மணி, கார்த்திக் ஆகியோர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபாபதி உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இவர்களில் சபாபதி, ஏற்கெனவே பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப் பட்டவர் என தெரியவந்துள்ளது.