சீரழியும் மின்வாரிய நிர்வாகம் ஊழியர்கள் பகிரங்க புகார்
6/17/2017 6:43:37 PM
சென்னை: தமிழக மின்வாரியம் உற்பத்தி மற்றும் வினியோகம் என இரண்டாக பிரிந்து செயல்படுகிறது. சென்னை, ஈரோடு, திருச்சி என 9 மண்டலங்கள் செயல்படுகின்றன. இவை அந்தந்த தலைமை பொறியாளர் தலைமையில் இயங்கி வருகின்றன. மேலும் மாநிலம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. மின்வாரிய தலைவராக சாய்குமார் தற்போது பொறுப்பேற்றுள்ளார். மாநிலம் முழுவதும் நேரடியாக சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பணிபுரிந்து வரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக மின்வாரியம் விளங்கி வருகிறது. பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்பட அலுவல் ரீதியாக எந்த முக்கியமான முடிவு என்றாலும் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தான் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி டெண்டர் விடுதல், பொருட்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளும் இங்கு தான் நடைபெறுகிறது.
இந்நிலையில், மின்வாரியத்தில், ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் அது நடக்கும் என்ற நிலை உள்ளது. இதற்கு புரோக்கர்களும் ஏராளமானோர் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மறுபுறம் தமிழகம் முழுவதும் மின்வாரியத்துக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: சமீபத்தில் கூட மின்வாரியம் தர வேண்டிய பணம் தொடர்பாக நவயுகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதே நிறுவனம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 110 நகரங்களில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் முடக்கி சென்றதும், அன்று ஒரு நாள் முழுவதும் அந்த நகரங்களில் கட்டணம் வசூல் செய்யாமல் இருந்ததும் தனி கதை.
டிரான்ஸ்பார்மர்களுக்கு இடம் தேர்வு செய்வது, டெண்டர் வழங்குவதில் ஊழல், கொள்முதல் பிரிவில் ஊழல், பணியாளர்களை பணியிட மாற்றம் செய்வதில் லஞ்சம் என எதற்கெடுத்தாலும் பணம், பணம் என மின்வாரிய அதிகாரிகள் லஞ்சத்தில் திளைத்து இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றம் சென்று தீர்வு கிடைக்குமா என்று போராடுவதும் உண்டு. இது போன்று கொஞ்சம் கொஞ்சமாக மாநிலம் முழுவதும் மின்வாரியத்துக்கு எதிராக போட்ட வழக்கு என கணக்கெடுத்தால், 2 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இப்படி இருக்கும் நிலையில், உயரதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், இவை அனைத்தையும் நிர்வகிக்கும் மின்வாரிய தலைவர் சாய்குமார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற கேள்வி அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் எழத்தான் செய்கிறது. இதே நிலை தொடர்ந்தால், நிர்வாக சீரழிவு இன்னும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.