தீ விபத்தில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் சரிந்தது
6/17/2017 5:59:25 PM
சென்னை: சென்னை தி.நகரில் வடக்கு உஸ்மான் சாலையில் 7 மாடி கட்டிடத்தில் இயங்கிவந்த சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் கடந்த 31ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 36 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயால் கட்டிடம் உருக்குலைந்தது. இதில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் நாசமானது. ‘‘ஜா கட்டர்” என்ற நவீன இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2ம் தேதி தொடங்கியது. கடந்த 9ம் தேதி ஜா கட்டர் இயந்திரம் ஜேசிபி இயந்திரத்தின் மீது சரிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் பலியானார். இதையடுத்து கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டிடத்தை இடிக்க மண் மேடு அமைத்து பணிகள் மேற்கொண்டதால் ஜா கட்டர் இயந்திரம் சரிந்து விழுந்தது. எனவே மீண்டும் இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க கட்டிடத்தை எப்படி இடிப்பது என்பது தொடர்பாகவும், அதற்கான மாற்று வழி குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதன்படி 100 அடி உயரம் கொண்ட கட்டிடத்தில் கண்டிப்பாக 20 அடி மண்மேடு சமன் செய்து அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போன்று மீண்டும் மண் மேடு அமைத்து கட்டிடம் இடிக்கும் பணி இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. முன்னதாக கட்டிடத்தின் 7வது மாடியில் உள்ள ஒரு பில்லரை தட்டினால் கட்டிடம் சரிந்து விழுந்து விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை அளித்தனர். இதையடுத்து கட்டிடத்தின் அருகில் யாரும் வர வேண்டாம் என்று போலீசார், பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். மேலும், அருகில் உள்ள கட்டிடங்களில் உள்ள ஊழியர்கள் வெளியேறுமாறும் தெரிவித்தனர். 50 அடி தூரம் அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதன்பிறகு ஜா கட்டர் இயந்திரம் மூலம் ஆபத்தான நிலையில் 7வது மாடியில் இருந்த கட்டிடத்தின் பில்லரை தட்டியவுடன் பயங்கர சத்ததுடன் கட்டிடம் சரிந்து விழுந்தது.
தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு பகுதி கட்டிடதத்தை இடிக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் மீண்டும் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு விடும் என்றும், வழக்கம் போல் நாளை முதல் இந்த மேம்பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் நிற்கும் கட்டிடத்தின் பாதி பகுதி: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் பாதி பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழ வாய்ப்புள்ளது. மேலும், கட்டிடம் முன்புறம் இடிந்து விழுந்தால் பாலத்திற்கு சேதம் ஏற்படும். எனவே, கட்டிடம் பின்புறமாக விழுந்தால் பிரச்சனை ஏற்படாது என்பதால் அதற்கான வேலைகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.