கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு
6/16/2017 5:10:11 PM
கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு ஜெயலலிதா எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். முதல் குற்றவாளி கனகராஜ் சேலம் கார் விபத்தில் இறந்து விட்டார். 2வது குற்றவாளி சயான் கேரள மாநிலம் பாலக்காட்டில் விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரளாவை சேர்ந்த ஜிபின் ஜோய், ஜம்சீர் அலி ஆகியோர் கேரள மாநிலம் மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாமியார் மனோஜ், கூலிப்படை கும்பலை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், மற்றொரு மனோஜ், குட்டி பிஜின் ஆகிய 7 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், குட்டி பிஜின் தவிர மீதமுள்ள 6 பேரை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு, கோவை மத்திய சிறையில் கடந்த மாதம் நடந்தது. எஸ்டேட்டில், கொள்ளையர் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய காவலர் கிருஷ்ணபகதூர், 6 பேரையும் சரியாக அடையாளம் காட்டினார்.
இவ்வழக்கில், கடைசியாக கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த குட்டி பிஜின் என்பவரை, அடையாளம் காட்டுவதற்கான, அடையாள அணிவகுப்பு கோவை மத்திய சிறையில் நேற்று நடந்தது. அப்போதும், கிருஷ்ணபகதூர் சரியாக அடையாளம் காட்டினார். 10 கைதிகளுக்கு இடையே குட்டி பிஜினை நிற்க வைத்து மாறி, மாறி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும் குழப்பம் இன்றி அடையாளம் காட்டினார். குட்டி பிஜின், ஜெயலலிதா எஸ்டேட் பங்களா அறைக்கதவுகளின் பூட்டை உடைத்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பயன்படுத்திய சூட்கேஸ் பூட்டையும் உடைத்து, திறந்துள்ளார். கள்ளச்சாவி மற்றும் கம்பி மூலமாக பூட்டுக்களை திறப்பதில் இவர் கில்லாடி. கொள்ளை நடந்த தினத்தில் குட்டி பிஜின் எந்தெந்த அறைக்கு சென்றார். இவருடன் யார், யார் சென்றார்கள் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.