ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு
6/16/2017 5:05:13 PM
புதுடெல்லி: ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கர்நாடக வாலிபர் உள்ளிட்ட 3 பேரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாட்கல் நகரைச் சேர்ந்தவர் முகமது முகமது ஷபி அர்மர் (வயது 30). இவர், இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது. முகமது ஷபி அர்மர், அவரது கூட்டாளிகள் ஒசாமா அகமது அதர், முகமது இஸா யூசுப் ஸகர் அலி பினாலி ஆகியோரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி முதன்முறையாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து இளைஞர்களை மூளை சலவை செய்து ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, தீவிரவாத சதி செயல்கள், சட்ட விரோத ஆயுத கொள்முதல், தீவிரவாத பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளது.
டெல்லியிலும், ஹரித்துவாரில் அர்த் கும்பமேளாவிலும் பயங்கர தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக இவர் உள்பட 6 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.
அர்மர் ஏற்கனவே இந்தியன் முஜாகிதீன் அமைப்பிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு இதே போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்த இவரது சகோதரர் சுல்தான் அர்மர் மறைவுக்கு பிறகு இந்த பணியை முகமது ஷபி அர்மர் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அர்மருடன் மற்ற இரண்டு கூட்டாளிகளும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். பாரீஸ், புரூசெல்ஸ் ஆகிய நகரங்களில் நடந்த தாக்குதல்களில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் அர்மர் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க அமெரிக்கா வலை விரித்துள்ளது.