தேனியில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம் : ஆந்திராவுக்கு மாற்றம்
6/15/2017 3:49:33 PM
புதுடெல்லி: தமிழகத்தில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம், ஆந்திராவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூட்ரினோ என்பது சூரியன், நட்சத்திரங்களிடம் இருந்து வெளியாகும் துகள். ஒளியின் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த துகள்கள் எதிரே உள்ள பொருட்களை ஊடுருவி செல்லும் தன்மை கொண்டவை. இதை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்நிலையில், நியூட்ரினோ துகளை ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011ல் அனுமதி வழங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைக்கப்பட இருந்த இந்த ஆய்வகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. 2.5 கிமீ தூரத்துக்கு சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்கப்பட இருந்தது.
இதனால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்க திட்டமிட்டப்பட்ட இந்த ஆய்வகத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், ஆய்வகம் அமைக்க கூடாது என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, ஆய்வகத்தை ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகேயுள்ள பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.