அன்னிய செலாவணி மோசடி வழக்கு 21ம் தேதி வீடியோ கான்பரன்சிங்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு
6/13/2017 5:09:07 PM
சென்னை: ஜெஜெ.டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும் கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும் பல கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது 1996ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சசிகலா சிறையில் இருப்பதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்துவதற்கு நீதிபதி ஜாகிர் ஹுசைனும் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, சசிகலா தரப்பு மூத்த வக்கீல், ‘முன்கூட்டியே கேள்விகளை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். அமலாக்கத்துறை வக்கீல், ‘சட்டத்தில் இடம் இருந்தாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்படும் போது நேரடியாக தான் கேள்விகள் கேட்கப்படபோகிறது. குற்றச்சாட்டு பதிவு செய்யும் போது நீதிமன்றத்திற்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் தான் வேலை. வக்கீல்களுக்கு எந்த வேலையும் இல்லை எனவே கேள்விகளை முன்கூட்டியே அளிக்க முடியாது’ என்றார்.
இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர் ஹூசைன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘’வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலாவிடம் விசாரணை நடத்தும் போதும், அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருக்க அனுமதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது. “சிறைத்துறை இதற்கு அனுமதி அளிக்காது” என்று அந்த மனுவை நீதிபதி மறுத்தார். இதையடுத்து, இவ்வழக்கை 21ம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன் அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி அன்றைய தினம் வீடியோகான்பரன்சிங் மூலம் சசிகலா ஆஜராக வேண்டும்.