கடன் தொல்லை, மனைவி பிரிந்த வேதனை 2 மகள்களுடன் தந்தை தூக்கிட்டு சாவு
6/13/2017 5:02:33 PM
திருவொற்றியூர்: மகள்களுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடன் பிரச்னை, மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. சென்னை மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் சங்கர் (38). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆஷா (32). இவர்களுக்கு 8ம் வகுப்பு படிக்கும் கவிதாலயா (13), 4ம் வகுப்பு படிக்கும் காவியா (10) என்ற மகள்கள் இருந்தனர். சங்கருக்கு போதிய வருமானம் இல்லாததால் மகள்களை படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. குடும்ப செலவு, படிப்புக்கு என்று அக்கம்பக்கத்தினரிடம் சங்கர் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் திண்டாடியுள்ளார்.
இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் சங்கருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றும் தம்பதிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆஷா, கோபித்து கொண்டு பக்கத்து தெருவில் வசித்துவரும் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று காலை 6 மணி அளவில் சங்கரின் மைத்துனர் சுபாஷ், அவரது வீட்டுக்கு வந்தபோது கதவு உள்தாழ்பாள் போடப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை என்றதால் சந்தேகமடைந்த சுபாஷ், பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, சங்கர் மற்றும் 2 மகள்கள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக 2 மகள்களுடன் தந்தை தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.