காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வாயில் விஷம் ஊற்றி கொன்று இளம்பெண் கிணற்றில் வீச்சு: 2 ஆண்டுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு
6/9/2025 3:30:30 PM
செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் மணலூரில் 2 ஆண்டுக்கு முன் எரிந்த நிலையில் பெண் உடல் கிடந்தது. தலை துண்டிக்கப்பட்டிருந்த அந்த பெண் யார், எந்த ஊர் என தெரியாமல் இருந்தது. நிலுவையில் கிடந்த இந்த வழக்கில் துப்பு துலக்க ஏரல் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் வைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் ஆறுமுகம் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் மணலூரில் எரிந்து கிடந்த பெண்ணை எனக்கு தெரியாது. ஆனால் கால்வாயில் உறவினர் பெண்ணைத்தான் நாங்கள் கொன்று கிணற்றில் கல்லைக் கட்டி வீசினோம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த உறவினர் சுடலைமுத்து திருப்பூர் அருகே கிணத்துக்கடவில் குடும்பத்துடன் தங்கி இருந்து தும்பு ஆலையில் வேலைபார்த்து வந்தார். அவரது மகள் வெண்ணிலாவும் (17) தந்தையுடன் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும், அங்கு வேலை பார்த்த வந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சுடலைமுத்து எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பை மீறி வெண்ணிலா அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சுடலைமுத்து குடும்பத்தினர் இருவரையும் பிரிக்க திட்டமிட்டனர். இதையடுத்து வெண்ணிலாவை தொடர்பு கொண்டு, நாங்கள் முறைப்படி உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். வீட்டுக்கு வரும்படி கூறினர். இதை நம்பி வந்த வெண்ணிலாவை, அங்கிருந்து கால்வாய் கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எடுத்துக்கூறியும், வெண்ணிலா தனது காதலில் உறுதியாக இருந்தார். இதை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த நானும், எனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, வெண்ணிலாவை கடத்தி, அவரது வாயில் விஷம் ஊற்றி கொன்றோம். பின்னர் உடலில் கல்லைக் கட்டி ஊருக்கு மேற்கே வல்லக்குளத்தின் நடுவே உள்ள கிணற்றில் வீசிவிட்டோம். மகளை காணாது அதிர்ச்சியடைந்த சுடலைமுத்து செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து வைகுண்டம் போலீசார் கால்வாய் கிராமத்திற்கு சென்றனர். அங்கு ஆறுமுகம் கூறிய கிணற்றில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். நேற்று மதியம் 1 மணியளவில் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் எடுக்கப்பட்ட நிலையில் சகதியில் பெண்ணின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கால்வாய் விஏஓ மற்றும் வைகுண்டம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (9ம் தேதி) சம்பவ இடத்திற்கு வந்தவுடன் உடல் கிணற்றில் இருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும். இறந்து கிடப்பது வெண்ணிலா தானா எனவும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.