தென்மேற்கு பருவமழை தொடக்கம் நாடு முழுவதும் சராசரியான மழை பெய்யும்: வானிலை ஆய்வுமையம் தகவல்
6/7/2025 4:11:17 PM
புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் சராசரியான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கொளுத்தும் வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வடமாநிலங்களில் வெயில் கொளுத்தியது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. அதிக வெப்பத்தால் நீர்நிலைகள் வறண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளா, அந்தமானில் மழைபெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருவமழை காலத்தில் பெய்ய கூடிய மழை இந்தாண்டு சராசரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில், 96 சதவீதம் அளவுக்கு மழை பெய்யும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது பருவமழையின் அளவு 2 சதவீதம் அதிகரித்து 98 சதவீதமாக இருக்கும் வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 96 முதல் 104 சதவீதம் வரை மழைபெய்தால் அது சராசரியான மழையாக கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.