உ.பியில் பயங்கரம் தொழிலதிபர், மனைவி மகன் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்
6/7/2025 4:09:17 PM
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தொழிலதிபர், அவரது மனைவி, மகன் ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், சிதாபூரை சேர்ந்தவர் சுனில் ஜெய்ஸ்வால்(60). தொழிலதிபரான இவர், தனது மகன் ரித்திக்குடன் வெளியே சென்றுவிட்டு நேற்று இரவு பைக்கில் வீட்டுக்கு வந்தார். ரித்திக் பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியபோது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டனர். அருகே இருந்த அவரது தந்தை ஜெய்ஸ்வாலையும் சுட்டனர்.குண்டுகள் பாய்ந்து ரத்தவெள்ளத்தில் இருவரும் சரிந்தனர். சத்தம்கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே ஓடிவந்த ஜெய்ஸ்வாலின் மனைவியையும் மர்ம ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
இதில், கணவன், மனைவியும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ரித்திக்கை அக்கம்பக்கத்தினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.