நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒரே அமைப்பு: மத்திய அரசு அடுத்த அதிரடி
6/7/2025 4:07:51 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் இன்ஜினியரிங், கலை, அறிவியல் என அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றுக்கு பதிலாக ஒரே ஒரு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கும் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்படுத்தி வருகிறது. இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய 2 அமைப்புகளுக்கு பதிலாக அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் உயர்கல்வி அதிகார ஒழுங்குமுறை ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக நிதி ஆயோக் அமைப்புடன் ஆலோசித்து வருகிறது. புதிய அமைப்புக்கான விதிமுறைகள், சட்டதிட்டங்களை உருவாக்கும் பணியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நிதி ஆயோக் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.கல்வி நிறுவனங்களைக் கட்டுப் படுத்த பல்வேறு அமைப்புகள் இருந்தால், அது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளுக்கு வழிவகை செய்யும்.
அதனால் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி சுதந்திரம் பாதிக்கப்படும். இதைக் கருத்தில்கொண்டே, தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பம் அல்லாத கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகிய அனைத்தையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.