வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது
6/7/2025 3:46:46 PM
திருச்சி: கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் உமாசங்கர்(30). பிளஸ்2 வரை படித்துள்ளார். 3 ஆண்டுக்கு முன் திருச்சி தில்லைநகர் 4வது கிராசில் உள்ள சாப்ட் கன்சல்டன்சி என்ற டிராவல்ஸ் நிறுவனம் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவையென விளம்பரம் கொடுத்திருந்தது. அந்த நிறுவனத்தை உமாசங்கர் அணுகியபோது, கனடா நாட்டில் மாதம் ரூ.2.25 லட்சத்தில் வேலை உள்ளதாகவும் அதற்கு ரூ.8 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். வேலை வாங்கி தருவதாக உமாசங்கரிடம் நிறுவன உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி (38), ரயில்வே ஊழியரான அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோர் ரூ.4.25 லட்சத்தை பெற்றனர். பணம் கொடுத்து பல மாதங்களாகியும் உமாசங்கரை வெளிநாட்டுக்கு அனுப்பாமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் உமாசங்கர் நேற்று புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், இந்நிறுவனத்தினர் வெளிநாட்டுக்கு ஆட்களை தேர்வு செய்ய எவ்வித அரசு ஆணையும் பெறாதது தெரியவந்தது. உமாசங்கரை போன்று மேலும் 11 பேரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மொத்தம் ரூ.61.25 லட்சத்தை நேரிலும், வங்கி மூலமும் பெற்று கொண்டு போலியான வெளிநாட்டு கம்பெனிகளின் ஆணைகளை கொடுத்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து அகிலாண்டேஸ்வரி, செந்தில்குமார் ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.