அண்ணா தொழிற்சங்க பெயர் பலகை மறைப்பு ஓபிஎஸ் அணியினர் புதிய சங்கம் துவக்கம்
6/7/2025 3:36:54 PM
பெரியகுளம்: அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள், புரட்சி தலைவி அம்மா தொழிற்சங்கத்தை புதிதாக தொடங்கியுள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளது. இதிலுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அச்சங்கத்தில் இருந்து பிரிந்து, ‘புரட்சி தலைவி அம்மா தொழிற்சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தை நேற்று துவக்கினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார்.
ஓபிஎஸ் வருவதற்கு முன் அவரது ஆதரவாளர்கள், பெரியகுளம் அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் முன் வைத்திருந்த அண்ணா தொழிற்சங்க பெயர் பலகையை போர்வையால் மறைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது ‘அண்ணா தொழிற்சங்கத்தில் 340 உறுப்பினர்கள் உள்ளோம். அதில் 36 உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்’ என்றனர்.