காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா ஜூலை 5ல் துவக்கம்
6/6/2025 4:04:43 PM
காரைக்கால்: நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார்(புனிதவதியார்) வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்காலில் மாங்கனி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருவிழா வரும் ஜூலை 5ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. புனிதநீர் கொண்டு ஹோமம் நடத்தப்பட்டது. பந்தல்காலுக்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில், ‘ஜூலை 5ல் துவங்கி 9ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. ஜூலை 5ம் தேதி பரமதத்தர் அழைப்பு (மாப்பிள்ளை அழைப்பு), 6ம் தேதி பரமதத்தர் - புனிதவதியார் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு, 7ம் தேதி பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், 8ம் தேதி பிச்சாண்டவர் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, வீட்டு வாசல், மாடிப்பகுதிகளிலிருந்து மாங்கனிகளை பிச்சாண்டவர் சப்பரம் போனபின், பக்தர்கள் மீது வீசுவர். அன்று மாலை அமுது படையல், இரவு முத்து சிவிகையில் சித்தி விநாயகர் கோயிலுக்கு பரமதத்தர் - புனிதவதியார் செல்லுதல், 9ம் தேதி இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.