கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 32 நாள் தொடர் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு
6/6/2025 3:59:05 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு அளித்தபேட்டி: தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரணம் கேட்டு தமிழக அரசு வைத்த கோரிக்கையை நிறைவேற்றாமல், விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, டெல்லியில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தினோம். ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில், மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டோம் என கூறினார். ஆனால் இப்போது மேல்முறையீட்டுக்கு செல்கிறார்கள். எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், வரும் 9ம் தேதி முதல் 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு மாவட்டம் என்ற வீதத்தில் போராட்டம் நடைபெறும். எங்களின் கோரிக்கைகள் நிறை வேறும் வரை, தொடர்ந்து நாங்கள் போராடுவோம். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.