திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 3 பேர் சிக்கினர்
6/6/2025 3:55:44 PM
திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று செல்ல தயாராக இருந்தது. முன்னதாக விமானத்தில் செல்லும் பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின்போது பயணிகள் 3 பேர், நகரும் பெட்டியின் அடியிலும், உடைமைகளுக்குள்ளும் பழைய நியூஸ் பேப்பர் மூலம் மறைத்து சவுதி ரியால், ஆஸ்திரேலியா டாலர், பவுண்ட், ஓமன் ரியல்ஸ் கடத்த முயன்றது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் அழைத்து சென்று தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் சென்னையை சேர்ந்த அப்பாஸ் வகாபுதீன்(40) என்பவர் ரூ.10.75 லட்சம் மதிப்பிலும், அப்துல்ஹக்(40) என்பவர் ரூ.18.30 லட்சம் மதிப்பிலும், திருச்சியை சேர்ந்த ரியாஸ்கான் (37) என்பவர் ரூ.7.50 லட்சம் மதிப்பிலும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்த இருந்தனர். 3 பேரும் ரூ.36.50 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சி கடத்த முயன்றது தெரியவந்தது. அப்பாஸ் வகாபுதீன், அப்துல்ஹக், ரியாஸ்கான் ஆகிய 3பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.