டெல்டாவில் கொட்டியது மழை
6/6/2025 3:53:04 PM
திருச்சி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 30ம் தேதி துவங்கிய நிலையில் தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று பகலில் வழக்கம்போல வெயில் கடுமையாக இருந்தநிலையில் மாலையில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், அரியலூர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. காரைக்கால்: காரைக்காலில் நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய மழை இன்று அதிகாலை 4 மணி வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம்ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. பாபநாசத்தில் இரவு 7 மணி முதல் 9 வரை இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. கடந்த 6 மாதத்தில் இதுபோன்ற கனமழை இங்கு பெய்ததில்லை.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்வலங்கைமான், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, குத்தாலம் சீர்காழி , கொள்ளிடம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நாகையில் இரவு 8 மணி முதல் 10 வரை கனமழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டது. மழை வெள்ளம் ரோடுகளில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர் செந்துறை உள்ளிட்ட இடங்களில் 2 மணி நேரம் மழை நீடித்தது. புதுகை மாவட்டத்தில் பொன்னமராவதி பகுதியில் லேசான மழை பெய்தது. பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்து வருகிறார்கள். நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ள நிலையில் நேற்று பெய்த மழை ஆறுதல் தருவதாக அமைந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.