அதிமுக ஆட்சியில் ஒரு பாலமாவது கட்டியது உண்டா? துரைமுருகன் கேள்வி
6/6/2025 3:50:58 PM
மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் பகுதி திமுக சார்பில், கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் வைர விழா பொதுக்கூட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் நேற்றிரவு நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர செயலாளர் குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் தரன், சத்ய சாய், கண்ணன், தம்பு, ராமச்சந்திரன், ஏழுமலை, மலர்விழிகுமார், விஜயகணபதி, உசேன், இனியரசு முன்னிலை வகித்தனர். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது: சாது வருஷத்தில் ஏற்பட்ட பஞ்சம்போல் இந்தாண்டும் பஞ்சம் நிலவுகிறது. தமிழகமே வறட்சி மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஜெயலலிதா ஆட்சியில் அணை கட்டினார்களா? திமுக ஆட்சியில் மாம்பழதுறை, சித்தாறு, பொகை, கொடுமுடி ஆறு, இருக்கங்குடி, சோத்துபாறை, பாலாறு, நல்லதங்கால், ராஜாதோப்பு உள்ளிட்ட 40 அணைகள் கட்டியுள்ளோம்.
சென்னையில் 27 பாலங்கள் கட்டியுள்ளோம். நீங்கள் ஒரு பாலமாவது கட்டியதுண்டா? நீங்கள் கேட்ட லஞ்சம் தரமுடியாமலும் ஐஏஎஸ் அதிகாரிகள் கேட்ட லஞ்சம் தரமுடியாமலும் பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. தமிழ்நாடு துறைமுகம் மூடும் நிலைக்கு வந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்துதான் ஆந்திரா, கர்நாடகாவுக்கு நிலக்கரி கொண்டு செல்லவேண்டும். ஆந்திராவில் உள்ள துறைமுகம் மூலம் நிலக்கரி கர்நாடகா, ஆந்திராவுக்கு செல்கிறது. மத்திய அரசு மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிறது. கொஞ்சநாள் போனால் உத்திரபிரதேச முதல்வர், யாரும் கல்யாணம் செய்யக்கூடாது என்பார். பாகிஸ்தான் நமது மக்களை கொல்கிறது. இதில் இந்திய அரசின் பாதுகாப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு துரை முருகன் பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தசரதன், வசந்தமாலா, விஸ்வநாதன், ஜெனனி ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திரநாத், வெளிகாடு ஏழுமலை, அப்துல்மாலிக், கோகுலகண்ணன், பரணி, ஆன்ட்ரோ, ராஜா, முத்துகுமார், தணிகையரசு, அரசு, சிவக்குமார், சசிகுமார், ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.