தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
6/6/2025 3:39:58 PM
மீனம்பாக்கம்: தமிழகத்தில் எவ்வளவு சீக்கிரம் மாற்றம் ஏற்படுமோ அந்தளவுக்கு மக்களுக்கு நல்லது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் 14ம் தேதி கூட இருக்கிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்னைகள், கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்?
ஆர்.ேக.நகர் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டதுமே, தமிழக சட்டப்பேரவையை கூட்டியிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சி, சட்டப்பேரவையை கூட்ட முன்வரவில்லை. எனவே எதிர்க்கட்சி என்ற முறையில் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி, வற்புறுத்தினோம். சபாநாயகரையும் சந்தித்து உடனே கூட்டத்தொடரை கூட்டும்படி வலியுறுத்தினோம். இப்போதாவது கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தி நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்த கூட்டத்தொடர் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால் இப்போது, அதிமுகவில் நிலவி வரும் சூழ்நிலையை பார்க்கும்போது, அவைகள் எல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த கூட்டத்தொடரில் திமுக மக்கள் பிரச்னையை எழுப்புமா?
திமுக எப்போதுமே மக்கள் பிரச்னைக்குதான் குரல் கொடுக்கும். அதேபோல் இந்த கூட்டத்தொடரிலும் மக்கள் பிரச்னைகளை தெளிவாக எடுத்து சொல்வோம்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என்று மைத்ரேயன் கூறியுள்ளாரே?
அவர் சொல்வதற்கெல்லாம் நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களை பொருத்தமட்டில் இந்த ஆட்சி உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். உடனே ஜனநாயக முறைப்படி தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற வேண்டும். அதன்மூலம் ஒரு நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதைதான் தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதா?
எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக மாற்றம் ஏற்படுமோ அந்தளவு தமிழக மக்களுக்கு நல்லது.