டெல்லியைப் போல் சேலம் அருகே கொடூரம் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம்: டிரைவர்கள், கண்டக்டர் வெறிச்செயல்
6/6/2025 3:37:16 PM
ஓமலூர்: சேலம் அருகே தனியார் பஸ்சில் சென்ற மாணவியை டிரைவர்கள், கண்டக்டர் என 3 பேர் சேர்ந்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவியின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் மூவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி, தனியார் பஸ்சில் சென்றபோது டிரைவர், அவருடைய நண்பர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசினர். இதில் மாணவி பலியானார். இதுதொடர்பான வழக்கில், மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம்போல், சேலம் அருகே நேற்றிரவு தனியார் பள்ளி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதுபற்றிய விபரம் வருமாறு: சேலம் நகர பஸ் நிலையத்தில் இருந்து கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரிக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது. கடைசி டிரிப் முடிந்தவுடன், இரவு 10 மணியளவில் அருகேயுள்ள நாரணம்பாளையத்திலேயே அந்த பஸ் நிறுத்தப்படும். பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் பஸ் புறப்பட்டு சேலம் வரும். கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் வலசையூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று இரவு 8.30 மணியளவில், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, எங்கு செல்வது என தெரியாமல் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அங்கு கருப்பூர் செல்லும் தனியார் பஸ் நின்றதை பார்த்து அதில் ஏறியுள்ளார். சேலத்தில் இருந்து பஸ் புறப்பட்ட நிலையில், கருப்பூருக்கு டிக்கெட் எடுத்தார். கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி அருகே பஸ் வந்தபோது பயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர். மாணவி மட்டும் தனியே பஸ்சில் வந்தார்.
சேலம் சன்னியாசிகுண்டை சேர்ந்த மணிவண்ணன் (33) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். அவருடன் மாற்று டிரைவரான அதிகாரிப்பட்டியை சேர்ந்த முருகன் (35) என்பவரும் வந்தார். வாழப்பாடி முத்தம்பட்டியை சேர்ந்த பெருமாள் (22) கண்டக்டராக இருந்தார். பஸ்சில் மாணவி தனியாக வருவதை அறிந்த அவர்கள், மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்தபடியே வந்தனர். இரவு 10 மணியளவில் கருப்பூரில் மாணவியை இறக்கி விடாமல் நாரணம்பாளையத்தை நோக்கி பஸ் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, டிரைவர்கள், கண்டக்டரிடம் பஸ் நிற்காமல் செல்வது குறித்து கேட்டுள்ளார். அப்ேபாது பெருமாள், முருகன் இருவரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்ய மணிவண்ணன் பஸ்சை ஓட்டியபடியே சென்றார். அதை தொடர்ந்து, முருகன் பஸ்சை ஓட்டிச் செல்ல, மணிவண்ணன் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
மூவரும் சேர்ந்து, அந்த மாணவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பஸ்சில் இருந்து மாணவியால் தப்பிக்க முடியவில்லை. அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வாகனங்களில் சென்றோர் பஸ்சை மடக்கி நிறுத்தினர். அப்போது மாணவி உடலில் ஆடை இல்லாமல் அலங்கோலமான நிலையில் கிடந்ததாக தெரிகிறது. ெபாதுமக்கள் டிரைவர்கள், கண்டக்டருக்கு தர்மஅடி கொடுத்து, அந்த பஸ்சுடன், மாணவி மற்றும் டிரைவர்கள், கண்டக்டர் ஆகிய 4 பேரையும் ஓமலூர் போலீசில் ெகாண்டு வந்து ஒப்படைத்தனர். மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். ஓமலூர் டிஎஸ்பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரஜினிகாந்த் ஆகியோர் பலாத்கார சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.