சிக்னல் கிடைக்கவில்லை மரத்தில் ஏறி செல்போன் பேசிய மத்திய அமைச்சர்
6/5/2025 3:31:28 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத காரணத்தால் மரத்தின் மீது மத்திய அமைச்சர் ஏறி நின்று போன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் அர்ஜுன் ராம் மேக்வால். இவர் ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த தொகுதியான பிக்கானேரில் சுற்றுபயணம் செய்து வருகிறார். அப்போது அப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றிற்கு அர்ஜுன் மேக்வால் சென்றார். அவர் வைத்திருந்த செல்போனில் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. செல்போனை பிடித்தபடியே அங்கும் இங்கும் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அலைந்தார்.
பிறகு இறுதியாக வேறு வழியின்றி கிராமவாசி ஒருவரிடம் ஏணியை கொண்டுவர கூறினார். அந்த ஏணியை அருகில் உள்ள மரத்தின் மீது சாய்த்து வைத்து மரத்தின் மீது ஏறி நின்று தனது செல்போனில் பேசினார். இதை அவருடன் சென்றிருந்த புகைப்படக்காரர்கள் தங்களது கேமராவில் படம் எடுத்து தள்ளினர். இந்த தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தில் இருந்து கிராமவாசிகள் அனைவரும் மத்திய அமைச்சர் மரத்தின் மீது ஏறி நின்று செல்போனில் பேசுவதை வேடிக்கை பார்க்க குவிந்தனர்.
ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா தலைமையிலான பாஜ ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் இங்குள்ள பல்வேறு கிராமங்களும் இன்னும் தொலைதொடர்பு வசதி கிடைக்காமல் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு டெல்லியில் சைக்கிளில் வந்து பொது மக்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியது.