வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை
6/4/2025 3:12:32 PM
கோவை: வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒப்படைக்க அதிகாரிகள் பணம் கேட்பதாக கூறி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டை நேற்று இரவு பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை வெள்ளலூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 2,816 வீடுகள் கட்டப்பட்டது. ஒரு வீட்டிற்கு ரூ.3.60 லட்சம் செலவிடப்பட்டிருந்தது. நேற்று போத்தனூர் நூர்செட் மகாலில் சூளைமேடு, நஞ்சுண்டாபுரம், ராஜவாய்க்கால், முத்துசாமி காலனி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வந்த 1294 பேருக்கு வீடுகள் வழங்கும் விழா நடந்தது.அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடந்த இந்த விழாவில், கோவை நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதியை சேர்ந்த 250 பயனாளிகள் பங்கேற்கவில்லை. தங்களது பகுதியில் விழா நடத்தி வீடுகளை ஒதுக்கி தராமல், பாரபட்சமாக விழா நடத்துவதாக கூறி, இவர்கள் விழாவை புறக்கணித்தனர். இது தொடர்பாக குடிசை மாற்று வாரியத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு, வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் சிலர், குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘‘இலவசமாக வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக கூறினார்கள். ஆனால் சாவி தரும்போது 10 சதவீதம் பயனாளிகள் பங்களிப்பு தொகையாக 36 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். எங்களால் இந்த தொகை தர முடியாது. வீடுகளை இலவசமாக தரவேண்டும்,’’ எனக்கூறினர்.அப்போது அமைச்சர் வீட்டில் இல்லாததால் அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்கள், ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து குனியமுத்தூர் போலீசார் அமைச்சர் வீட்டிற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். பெண்கள் கலைந்து ெசல்லாமல் அங்கேயே உட்கார்ந்தனர். இதனை தொடர்ந்து பெண்களை அழைத்து அமைச்சர் ஆதரவாளர்கள், குடிசை மாற்று வாரியத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக அமைச்சரிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அனுப்பிவைத்தனர்.