கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி
6/2/2025 3:48:31 PM
கோவை: கோவை அடுத்த போத்தனூர் கணேசபுரம் மூரண்டம்மன் கோயில் வீதியில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஒற்றை காட்டு யானை புகுந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஜோதிடர் விஜயகுமார் தனது மகள் காயத்ரி(12) என்பவருடன் வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு புகுந்த காட்டு யானை தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் தாக்கியது. இதில் சம்பவ இடத்தில் காயத்ரி பலியானார். தப்பியோட முயன்ற விஜயகுமார் படுகாயமடைந்தார். ஊருக்குள் யானை புகுந்ததை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதை தொடர்ந்து படுகாயமடைந்த விஜயகுமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு ஒரே பதற்றமாக காணப்பட்டது.
பொதுமக்கள் துரத்தியதில் அந்த யானை வெள்ளலூர் பஜனை கோயில் வீதியில் புகுந்தது. இன்று காலை 5.30 மணிக்கு பொதுக்கழிப்பிடத்துக்கு செல்ல நடந்து சென்ற அதே வீதியை சேர்ந்த நாகரத்தினம்(50), ஜோதிமணி(60) ஆகியோரை தாக்கியது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதற்கிடையே யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், கம்பர் வீதியை சேர்ந்த பழனிசாமி(73) ஆகிய இருவரையும் துரத்திச் சென்று தாக்கியது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் துரத்தியதில் அங்கிருந்து தப்பிய யானை வெள்ளலூர் பகுதியில் சுற்றி திரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் ஆயுதபடை காவலர்கள் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியான 4 பேரின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.