ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் தொடங்கியது
6/2/2025 3:43:55 PM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று தொடங்கியது. வரும் 9ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. உற்சவத்தின் முதல்நாளான நேற்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6 மணிக்கு வசந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்ட நீராழி மண்டபத்தில் இரவு 8.30 மணி வரை சேவை சாதித்தார். பின்னர் 8.30 மணிக்கு அலங்காரம் அமுதும் செய்விக்கப்பட்டு, நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வசந்த உற்சவ மண்டபத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு சென்றடைந்தார். உற்சவத்தின் நிறைவுநாளான 9ம் தேதி மாலை 5 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைகிறார். நம்பெருமாள் வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபத்தை சுற்றியுள்ள நீரூற்றுகளில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது.