பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பிரம்மாண்ட பேரணிக்கு லாலு பிரசாத் ஏற்பாடு: அகிலேஷ், மாயாவதி பங்கேற்பு
6/1/2025 5:13:29 PM
அக்ரா: மத்தியில் ஆளும் பாஜ அரசுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில், பீகாரில் பிரம்மாண்ட பேரணிக்கு ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் ஏற்பாடு செய்துள்ளார். ஆகஸ்டு மாதம் 27ம் தேதி நடைபெறும் இந்த பேரணியில், உத்தரபிரதேச அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அகிலேஷ், மாயாவதி பங்கேற்க உள்ளனர்.பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கிறது. லாலுவின் இரண்டு மகன்கள் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், மாட்டுத்தீவன ஊழல், குடும்பத்தினரின் முறைகேடான சொத்துக்கள் குறித்து, பீகாரில் எதிர்க்கட்சியாக விளங்கும் பாஜ பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. தன்னை மிரட்டுவதற்காக குடும்பத்தினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக லாலு பிரசாத் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், தேசிய அளவில் பாஜவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் லாலு பிரசாத் ஈடுபட்டுள்ளார். இதற்காக வருகிற ஆகஸ்டு மாதம் 27ம் தேதியன்று பீகாரில் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளார். இதில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜ தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அகிலேஷின் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை படுதோல்வியை சந்தித்தன.
இந்நிலையில், பீகாரில் நிதிஷ்குமாருடன் இணைந்து பாஜவை வீழ்த்தியது போல், வரும் காலத்தில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என லாலு பிரசாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில்தான் லாலு பிரசாத் நடத்தும் பேரணியில் இருவரும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.