காஷ்மீரில் ராணுவம் அதிரடி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
6/1/2025 5:10:19 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் இன்று 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற வீரர்கள், தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். வீரர்களை கண்டதும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.இரவு முழுவதும் கடும் சண்டை நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், தீவிரவாதிகளும் அதிகளவில் ஊடுருவுகின்றனர். எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வரும் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி உட்பட 8 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.