ஆம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 14 வயது சிறுமி கர்ப்பம் 60 வயது வியாபாரி கைது: கரு கலைத்த போலி டாக்டர்கள் சிக்கினர்
5/31/2017 3:36:20 PM
ஆம்பூர்: ேவலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது முதல் மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. 2வது மகளுக்கு 14 வயது. இவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு அதே பகுதியில் கிளினிக் நடத்தி வரும் ஜெயபால் என்பவரிடம் சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.அதே பகுதிதியில் ஸ்கூல் வீதியில் வசித்து வரும் பழ வியாபாரியான சலீம் (60) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை கடந்த வாரம் ஜெயபாலிடம் அழைத்து சென்றனர். அவர் தெரிவித்தபடி பேரணாம்பட்டில் உள்ள ஜெயலட்சுமியிடம் அழைத்து சென்றனர். அவர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். இதில் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வேதனை அடைந்த சிறுமியின் தந்தை உம்ராபாத் போலீசில் புகார் செய்தார். மேலும் இதுதொடர்பாக மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) கலிவரதனும் விசாரணை மேற்கொண்டார். அவரும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் எஸ்ஐ ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சலீம் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். குடும்பத்தாரிடம் நட்பாக பழகி இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். சலீமுக்கு திருமணமாகி 5 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் 5 பேருக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் உள்ளனர்.
மேலும் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த ஜெயலட்சுமி, பரிந்துரை செய்த ஜெயபால் ஆகியோர் போலி டாக்டர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய பழ வியாபாரி சலீமையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.