குஜராத்தை வீழ்த்தி புனே 6வது வெற்றி; பென் ஸ்டோக்ஸால் பெருமை கொள்கிறேன் : கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு
5/2/2025 5:35:50 PM
புனே: ஐபிஎல் டி20 தொடரில், புனேவில் நேற்று இரவு நடந்த 39வது லீக் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் 19.5 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரண்டன் மெக்கல்லம் 45 ரன்கள் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இம்ரான் தாஹிர், ஜெயதேவ் உனத்காட் தலா 3, ஷர்துல் தாகூர், கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த புனே 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் தலா 4, மனோஜ் திவாரி 0, திரிபாதி 7 ரன்களில் ஆட்டமிழந்ததால், 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து புனே திணறியது. எனினும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் (63 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசியதால் வெற்றியை வசப்படுத்தியது.
அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய டோனி 26, கிறிஸ்டியன் 17 ரன்கள் எடுத்தனர். பாசில் தம்பி, பிரதீப் சங்வான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இரு அணிகளுக்கும் இது 10வது போட்டியாகும். புனே 6வது வெற்றியையும், குஜராத் 7வது தோல்வியையும் சந்தித்தன. வெற்றி குறித்து புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. எனினும் எங்கள் கூடாரத்தில் சில பீரங்கிகள் உள்ளன. பென் ஸ்டோக்சும், டோனியும் வெற்றியை வசப்படுத்தி விட்டனர் (5வது விக்கெட்டிற்கு டோனிஸ்டோக்ஸ் 76 ரன் சேர்த்தனர்). இந்த மைதானத்தில் சிக்சர் விளாசுவது எளிது. அதை ஸ்டோக்ஸ் அழகாக பயன்படுத்தி கொண்டார்.
அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரால் பெருமை கொள்கிறேன். குஜராத்தை 161 ரன்களுக்கு சுருட்டிய பவுலர்களுக்கு பாராட்டுக்கள்’ என்றார். குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘2530 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். பாசில் தம்பி, ஜேம்ஸ் பால்க்னர் பந்து வீசுகையில் பனி அதிகளவில் இருந்தது. அத்துடன் எங்களிடம் தரமான ஸ்பின் அட்டாக்கும் இல்லை. ஸ்டோக்சின் ஆட்டம்தான் திருப்புமுனையாக அமைந்து விட்டது. அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் எங்களுக்கு 4 போட்டிகள் உள்ளது. அவை எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்’ என்றார்.