உத்தரகண்டில் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்
5/2/2025 5:13:10 PM
டேராடூன்: உத்தரகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று திரிவேந்திர சிங் ரவாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கிடையில் விகாஸ் நகர் தொகுதியில் பாஜ வேட்பாளர் முன்னா சிங் சவுகானை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நவ்பிரபாத் தோல்வி அடைந்தார். ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு வேலைகள் செய்து முன்னா வெற்றி பெற்றார் என நவ் பிரபாத் குற்றம் சாட்டி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்களை சீலிட்டு முடக்கி வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதை வேறு எந்த தேர்தலுக்கும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாநில தேர்தல் கமிஷன் மற்றும் பா.ஜ. எம்.எல்.ஏ., முன்னா சிங் ஆகியோருக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ராஜ்பூர் ரோடு, பெல் ராணிபூர், ராய்ப்பூர், முசவுரி, பிரதாப் நகர் மற்றும் ஹரித்துவார் புறநகர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள், தங்கள் தொகுதிகளிலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு வேலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சர்வேஷ் குமார் குப்தா இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் மாநில தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்குகளின் மீதான விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.