விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு
4/12/2025 6:00:39 PM
புதுடெல்லி- காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கர்நாடகாவில் சிக்மகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருக்கும் சைத்ரா என்பவர் தனது காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர், அமைச்சர், கலெக்டர், நீதிபதி போன்ற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் கார்களில்தான் சிவப்பு சுழல் விளக்கு பொருத்துவது நடைமுறை. ஆனால் பஞ்சாயத்து தலைவியாக இருக்கும் சைத்ராயின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய அளவில் அரசியல் கட்சிகள் மத்தியில் விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வரும் வேளையில் இது அரசியல் கட்சிகள் மத்தியிலும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்கள் யாரும் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தக் கூடாது என்று முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதே போல் தற்போது பஞ்சாபில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கும் இந்த பாணியை பின்பற்றியுள்ளார்.
இதனால் காரில் சிவப்பு விளக்கு பொருத்தும் விவகாரம் தேசிய அளவில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக விவாதிக்க மூத்த அமைச்சர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதிக்குள் இது குறித்து மூத்த அமைச்சர்களுடன் மோடி விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நிதிபதி, மக்களவை தலைவர் ஆகியோரின் கார்களில் மட்டும் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மத்திய அரசின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.