கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்
4/12/2025 5:50:21 PM
புதுடெல்லி- கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின்னர் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 கரன்சி நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதை மாற்றிக் கொள்ள டிசம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட அதிக தொகை குறித்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் சுமார் 18 லட்சம் பேர் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக நேற்று ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்கையில், கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பிறகு நாடு முழுவதும் சுமார் 1100க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதன் மூலம் சுமார் ரூ.5400 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.610 கோடி அளவுக்கு புதிய கரன்சி நோட்டுகள் சிக்கின. வரி மற்றும் அபராதம் மூலமாக ரூ.2 ஆயிரத்து 476 கோடி வருவாய் திரட்டப்பட்டுள்ளது என்றார்.