விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது: மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி
4/12/2025 5:48:50 PM
புதுடெல்லி- விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என மத்திய அரசு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இ்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக உயிரை விட மேலான மானத்தை கூட விட்டு விட்டு பிரதமர் அலுவலகம் முன்பாக நிர்வாண போராட்டம் வரை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் தங்களது பயிர் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, விவசாய பிரச்னைகளில் மத்திய அரசின் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது அதை தொடர்ந்து நபார்டு வங்கியும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என கைவிரித்து விட்டது. இந்த சூழலில் பயிர்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் வசம் இல்லை என மத்திய அரசு நேற்று பார்லி.யில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இருந்த போதிலும் விவசாயிகளின் கடன் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுகுறித்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மத்திய அரசின் இந்த பதில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.