ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: விஜய பாஸ்கரிடம் சிபிஐ விசாரணை - சுமித்ராவிடம் ஓபிஎஸ் அணி எம்பி சுந்தரம் கோரிக்கை
4/12/2025 2:48:43 PM
புதுடெல்லி- தமிழக அமைச்சர் விஜய பாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனிடம் ஓபிஎஸ் அணி அதிமுக எம்பி பி.ஆர்.சுந்தரம் நோட்டீஸ் அளித்துள்ளார். ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வாக்குபதிவு இன்று நடைபெற இருந்தது. அண்மையில் இது ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அதிமுக அம்மா அணியான தினகரன் தரப்பினர் பணத்தை தண்ணீராக வாரியிறைத்தனர் என பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணைத்திற்கு புகார்கள் பறந்தன. தேர்தல் கண்காணிப்பு படையினரே ஒரு சில இடங்களில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி கையும் களவுமாக பிடித்தனர். இந்த சூழலில் ஆர்.கே.நகர் பண வினியோகம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் கடந்த 7ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பண வினியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏராளமான முக்கிய ஆவணங்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகியவை சிக்கின. இவற்றை கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே. நகர் இடை தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடை தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழக அமைச்சர் விஜய பாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனை சந்தித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக எம்பி சுந்தரம் இன்று நோட்டீஸ் அளித்தார். மேலும் விஜய் பாஸ்கருக்கு நெருக்கமான கூட்டாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக சசிகலா அணி தரப்பு எம்பி தம்பித்துரை மற்றும் ஓபிஎஸ் தரப்பு எம்பி மைத்ரேயன் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என பின்னர் அவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக விஜய் பாஸ்கர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.