திருவொற்றியூரில் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
3/25/2017 12:55:56 PM
திருவொற்றியூர்- தீபாவை தரக்குறைவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் திருவொற்றியூரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா போட்டியிடுகிறார். இவரை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தீபா பேரவை மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமையில் திருவொற்றியூர், கணக்கர் தெருவில் நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர்.
தீபாவை தரக்குறைவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜுவின் உருவப்பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமரசம் பேசினார். இதையடுத்து தீபா பேரவையினர் கலைந்து சென்றனர்.