வர்தா புயல் பாதிப்பு கண்டுகொள்ளாத மத்திய அரசு - தா.பாண்டியன் தாக்கு
1/7/2025 1:13:35 PM
முத்துப்பேட்டை - திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லியில் முன்னாள் எம்.பி எஸ்.ஜி.முருகையன் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் அளித்த பேட்டி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியபோது பெரும் சேதமும், பாதிப்பும் ஏற்பட்டது. 10 நாட்கள் வரை சாய்ந்த மரங்களையும், மின் கம்பங்களையும் அகற்றும் பணிகள் நடைபெற்ற நிலையிலும் கண்டு கொள்ளாத மத்திய அரசு புயல் பாதிப்பை மத்தியக்குழு வந்து தான் மதிப்பிட வேண்டும் என்று கூறியது.
மத்தியக்குழு ஆய்வு செய்தால் தான் புயல் பாதிப்பு தெரியும் என்று கூறுவது எப்படி ஏற்புடையது ஆகும்? கடந்த ஆண்டு வெள்ள சேதத்துக்கு தமிழக அரசு கேட்ட ரூ.22 ஆயிரம் கோடி நிதியில் மத்திய அரசு எவ்வளவு தந்துள்ளது என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். தமிழக அரசு வெளிப்படையாக நிதி வருமா, வராதா என மத்திய அரசை கேட்டு எச்சரிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு பிரச்னையில் போட்டியை நடத்தலாமா, வேண்டாமா என மத்திய அரசு தெளிவான பதிலை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.