பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’
12/2/2025 3:20:06 PM
சென்னை, - சென்னையில் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2012-16 ஆண்டுகளில் சென்னையில் கொலை, திருட்டு, ஆதாயக் கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரிக்க அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 14,551 பேர் குறித்த விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 11,303 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 3,248 பேர் வெளிமாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் செய்த குற்றங்கள் உள்ளிட்ட முழு விவரங்களுடன் ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்பட்டுள்ளது. இது, ரோந்து போலீசார் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் செல்போனில் பதிவிறக்கம் ெசய்து தரப்படும். இதன்மூலம், புதிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஏற்கனவே ஏதேனும் குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களா என எளிதில் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப விரைவில் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த திட்டத்தை வரும் ஜனவரி முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீசார் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் உறுப்பினர்கள் அடங்கிய வாஸ்ட் அப் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ேமலும், சென்னை முழுவதும் தனியார் நிறுவனம், குடியிருப்போர் நல சங்கம் மற்றும் போலீசார் சார்பில் மொத்தம் 27,728 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்ேபாது மயிலாப்பூரில் 2002, தி.நகரில் 5635, அடையாரில் 4572, அண்ணா நகரில் 2329, திருவல்லிக்கேணியில் 544 சிசிடிவி கேமராக்கள் என, சென்னையில் உள்ள 4 காவல் மண்டலங்களில் 20,995 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6733 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.