மாற்றிடம் வழங்கக் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
12/2/2025 3:17:21 PM
தண்டையார்பேட்டை, -மாற்றிடம் வழங்கக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை அப்புறப்படுத்தி மாற்றிடம் வழங்க சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டது.
பெரும்பாக்கத்தில் மாற்றிடம் ஒதுக்கி இருப்பதால் எங்களின் வாழ்வாதாரமும் குழந்தைகளின் படிப்பும் பெரிதும் பாதிக்கும். எனவே அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் அல்லது திருமழிசை பகுதியில் மாற்றிடம் ஒதுக்கி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாற்றிடத்துக்கான மனுவை கலெக்டரிடம் கொடுப்பதற்கு காத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் சம்மதத்தின்பேரில், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.