மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்
12/2/2025 3:14:54 PM
பொன்னேரி, -ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 2 வாலிபர்கள் வாடகை காரில் மீஞ்சூருக்கு வந்தனர். காரை நெல்லூரை சேர்ந்த ரகமதுல்லா (45) ஓட்டி வந்தார்.பொன்னேரி வழியாக காணியம்பாக்கம், ரங்கநாதர் கோயிலின் பின்புறம் கார் வந்தபோது, காரில் வந்த 2 பேர் ‘சிறுநீர் கழிக்க வேண்டும்’’ என்று டிரைவரிடம் கூறினர். இதனால் காரை டிரைவர் நிறுத்தினார். அப்போது அவர்கள் இருவரும், டிரைவர் ரகமதுல்லாவை சரமாரியாக தாக்கி, அவரது செல்போனையும் பறித்து கொண்டனர். பின்னர் காரை கடத்தி சென்றனர். இதன்பிறகு ரகமதுல்லா, காணியம்பாக்கத்தில் இருந்து சுமார் 6 கிமீ தூரம் நடந்து மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தார்.
பொன்னேரி டிஎஸ்பி கண்ணன் மேற்பார்வையில், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, எஸ்ஐக்கள் டில்லிபாபு, சந்திரசேகர், எஸ்எஸ்ஐகள் முனிவேல், கர்ணா, பழனி, ஏழுமலை ஆகியோர் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் மீஞ்சூர் பகுதியில் வினோத்குமார் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய ஜவகர் கும்பல்தான் காரை கடத்தி சென்றது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, மீஞ்சூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜவகர், மதன், உதயா, சக்திவேல் ஆகிய 4 பேரை நேற்றிரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.