திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு
12/2/2025 3:13:26 PM
ஆவடி, -சென்னையில் இருந்து திருப்பதிக்கு சிடிஎச் நெடுஞ்சாலை செல்கிறது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஏராளமான அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இதனால் இச்சாலை எப்போதும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும்.சில ஆண்டுக்கு முன் சென்னை பாடி முதல் திருநின்றவூர் வரை சிடிஎச் சாலை விரிவு செய்யப்பட்டது. திருநின்றவூர் பகுதி வியாபாரிகளின் எதிர்ப்பு காரணமாக, திருநின்றவூரில் காந்தி சிலை முதல் காவேரி தியேட்டர் வரை முன்பிருந்த அளவின்படியே புதிய சாலை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக திருநின்றவூர் பஜார் பகுதியில் சிடிஎச் சாலை மிக குறுகலாகவே இருக்கிறது. இதில் ஒரு கனரக வாகனமோ, பேருந்தோ முன்னே சென்றால், மற்றொரு வாகனம் முந்தி செல்ல முடியாத அவலநிலை நீடித்து வருகிறது.
திருநின்றவூர் பஜாரில் சிடிஎச் சாலையில் நாளுக்கு நாள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு கடைக்காரரும் தங்களது வியாபார பொருட்களை சாலையோரத்தில் அடுக்கி வைத்துள்ளனர். அங்குள்ள கடைகளின் முகப்பு ஷெட், சாலையை ஆக்கிரமித்தபடி வியாபார பொருட்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளனர். அதோடு, சாலையோரமாக தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள் விற்கும் கடைகளையும் ஆக்கிரமித்து நிறுத்திவிடுகின்றனர். இதனால் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கனரக வாகனங்களில் சிக்கி உயிர் இழக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன் திருநின்றவூரில் குறுகலான சிடிஎச் சாலையில் மொபட்டில் வந்த தாய், மகன் ஆகிய இருவரும் லாரியில் சிக்கி உயிரிழந்தனர். திருநின்றவூரில் குறுகலான சிடிஎச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆவடி போக்குவரத்து பிரிவு போலீசாரிடமும் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை ெபாதுமக்கள் புகார் தெரிவித்தும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.