புதிய கரன்சி வைக்கும் வகையில் 1.80 லட்சம் ஏடிஎம்கள் மறுசீரமைப்பு
12/2/2025 2:36:51 PM
புதுடெல்லி, -கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, ரூ.2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், புதிய ரூ.500 நோட்டு வர காலதாமதம் ஆனது. இதனால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான ஏடிஎம்கள் மூடியே கிடக்கின்றன.
இந்நிலையில், புதிய நோட்டுகளை வைக்கும் வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ஏடிஎம் இயந்திரங்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதில் சுமார் 40 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தினமும் 12 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை 1.80 லட்சம் ஏடிஎம்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் பணிகள் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளன.