வங்கி கணக்குகளை பயன்படுத்தி கருப்பு பணத்தை மாற்றுவதற்கு உதவினால் கடும் நடவடிக்கை - மத்திய நிதி அமைச்சர் எச்சரிக்கை
11/19/2016 12:52:13 PM
புதுடெல்லி, - மற்றவர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள் மீதும், அதற்கு உதவியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.கடந்த 8ம் தேதி முதல் வெளியான அறிவிப்பை தொடர்ந்து செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். டிசம்பர் 30 வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு காலக்கெடு அறிவித்துள்ளது. இதற்கிடையில் மத்திய அரசால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான மானியங்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்குகளை குறிவைத்து கருப்பு பணம் பதுக்குவோர், ஹவாலா தரகர்கள் ஆகியோர் பணத்தை மாற்றுகின்றனர். சாதாரண ஏழை எளிய மக்களுக்கு கமிஷன் கொடுத்து அவர்களின் வங்கி கணக்குகளில் தங்கள் பணத்தை போட்டு மாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தடுப்பதற்காக கரன்சி மாற்ற வருபவர்களுக்கு விரலில் மை தடவப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் தற்போது மை வைக்கப்பட்ட பின்னர் வங்கிகளில் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் மற்றவர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் முன்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘சிறுவணிகர்கள், கூலி தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகியோரின் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அது பற்றி வருமான வரித் துறை கேட்காது’ என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ‘‘மற்றவர்களின் கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்களது வங்கி கணக்கை பிறரின் செயல்பாடுகளுக்காக அனுமதிப்பவர் மீது வருமானவரித் துறை சட்டத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மற்றவர்களின் கருப்பு பணத்தை தங்களது வங்கி கணக்கை பயன்படுத்தி வெள்ளையாக மாற்றுவதற்கு பொது மக்கள் அனுமதிக்கக் கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது. ‘அரசிடம் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணத்தை பதுக்க நினைக்கும் யாரும் தப்ப முடியாது. அவர்களுக்கு எந்த வகையி–்லும் மத்திய அரசு உதவி செய்யாது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியில் கருப்பு பணத்தை முற்றிலும் அழிக்காமல் விடப் போவதில்லை. இது போன்று அடுத்தவர் கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள் குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் அளிக்கலாம்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.