கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ளது மாசாணியம்மன் கோயில். இங்கிருக்கும் அம்மன் சிலை, படுத்த நிலையில் உக்கிரமாய் காட்சியளிக்கிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் வினோதமான நேர்த்திக்கடனை செய்கிறார்கள். தங்கள் எதிரிகள் வீழ வேண்டும் என வணங்கும் மக்கள், அம்மன் முகத்தில் மிளகாயை அரைத்து பூசுகின்றனர். மிளகாய் காரம், பகைவர்களை பொடியாக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நேர்த்திக்கடனை செலுத்துதற்காக வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை நாட்களில் பெண்கள் கூட்டம் கோயிலில் அலைமோதுகிறது. ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து, வெளிப்புறத்தில் இருக்கும் சிறிய மாசாணியம்மன் சிலைக்கு கார மிளகாயை அரைத்து பூசுகின்றனர்.
மிளகாய் வழிபாட்டுக்காகவே பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கோயிலில் திரளுகிறார்கள். அங்குள்ள வீடுகளில் நகை, பொருள் மாயமாகி விட்டால், வீட்டுக்காரர்கள் போலீசாரிடம் செல்வதில்லையாம். ‘பொருள் காணாமல் போய்விட்டது. மாசாணி அம்மனுக்கு மிளகாய் அரைக்க போகிறேன்‘ என்று அக்கம்பக்கத்தில், சுற்றுப்பகுதிகளில் சொல்லுகிறார்கள். இதை கேள்விப்பட்டு கலங்கி போகும் திருடர்கள், சொல்லியோ, சொல்லாமலோ பொருளை எடுத்த இடத்தில் வைத்துவிடுவார்களாம். இதுபோன்ற சம்பவங்கள் இங்கு சர்வசாதாரணம் என்கிறார்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள். மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி நாச்சம்மாள் கூறுகையில், ‘மாசாணி அம்மனுக்கு மிளகாய் அரைச்சு போட்டா, பொருளை திருடுனவங்கள, அவ சும்மா விட மாட்டா. அவுங்க படுக்கையில விழுந்துடுவாங்க.
அந்த அளவுக்கு மாசாணி ஆத்தா உக்கிரமானவ‘ என்றார் பயபக்தியோடு. எதிரியின் மீதுள்ள கோபத்தை பொறுத்து கால் கிலோ, அரை கிலோ, 1 கிலோ என மிளகாயை அரைக்கிறார்கள் பக்தர்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் இக்கோயிலுக்கு ஏராளமானோர் வந்து மிளகாய் நேர்த்திக்கடனை பக்தியோடு நிறைவேற்றுகிறார்கள். பல பக்தர்கள் தொடர்ந்து வந்து வழிபடுகின்றனர். ‘தீங்கு செய்யும் பகைவர்களை, மாசாணி அம்மன் தண்டிக்காமல் விட்டதில்லை‘ என்றே அவர்கள் அனைவரும் கூறுகின்றனர். செய்தி: கோவை நாச்சிபாளையம் கே.பூபதி
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook