புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அருள்மிகு அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 51ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கும், முனீஸ்வரருக்கும் பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 6300 பேர், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.முன்னதாக திருவள்ளூர் சாலையில் உள்ள புழல் ஏரிக்கரையில் இருந்து, காப்பு கட்டிய பக்தர்கள், பல்வேறு கரகங்கள், பூச்சட்டிகள் ஆகியவற்றை ஏந்தியபடி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
இந்த நிகழ்ச்சியை காண சென்னை வியாசர்பாடி, சர்மா நகர், புழல், பாடியநல்லூர், மொண்டியம்மன் நகர், அம்பத்தூர், ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பி.கார்மேகம், மாநகர எம்.கண்ணன், எம்.மாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர் கே.பார்த்திபன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், கே.சந்துரு, மச்சவல்லி, தனம் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள், அறங்காவலர்கள், அன்னதான குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.