சென்னை: தமிழக பாஜ சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை கமலாலயத்தில் இன்று காலை தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பாஜவினர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனுக்களை அங்கேயே பூர்த்தி செய்து வழங்கினர். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஆயிரம் விளக்கு மற்றும் மயிலாப்பூர் தொகுதியில் பாஜ இளைஞரணி பொதுச்செயலாளர் வினோஜ் பி.செல்வம், துறைமுகம், வில்லிவாக்கம் தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், சேப்பாக்கம் தொகுதிக்கு மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் விருப்ப மனு அளித்தனர்.
இதேபோல் பாஜ வர்த்தகர் அணி செயலாளர் இல.ராஜேந்திரன் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட கோரி விருப்ப மனு தாக்கல் செய்தார். பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சேப்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதியில் போட்டியிட கோரி அவரது பெயரில் ஏராளமான பாஜவினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். விருப்ப மனுக்கள் இன்றும், நாளையும் வாங்கப்படுகிறது. தொடர்ந்து மனுக்கள் வாங்கியவர்களிடம் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 13 பாஜ கோட்டங்களில் நேர்காணல் நடக்கிறது. விருப்ப மனுக்களை பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், துணைத்தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வாங்கினர்.