தர்மபுரி: தர்மபுரியில் திருமண நிகழ்ச்சியின் போது, மாப்பிள்ளை பிடிக்காததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு வந்திருந்த மணப்பெண், மண மேடையில் மயங்கி விழுந்தார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் தனலட்சுமி (20, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பாலக்கோட்டில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், டிப்ளமோ நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவருக்கும் தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்த முனியப்பன் (22) என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். முனியப்பன், ஓசூரில் உள்ள ஒரு தனியார் டூவீலர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள மாப்பிள்ளையின் வீட்டில் இன்று காலை திருமணம் செய்துவது என முடிவு செய்யப்பட்டு, உறவினர்களுக்கு பத்திரிகை விநியோகிக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் மாப்பிள்ளையின் வீட்டில் இரு வீட்டார் தரப்பிலும் இன்று காலை உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.முகூர்த்த நேரம் நெருங்கியதும், மணமக்கள் இருவரும் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர். முனியப்பன், தனலட்சுமியின் கழுத்தில் தாலி கட்ட சென்ற போது, மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக தனலட்சுமியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் சோதனை செய்ததில், தனலட்சுமி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். மயக்கம் தெளிந்ததும், தனலட்சுமி தனது பெற்றோரிடம், ‘‘எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. நான் தொடர்ந்து படிக்க வேண்டும்,’’ எனக்கூறியுள்ளார். இதனால்தான் மணமேடைக்கு வருவதற்கு முன்பாகவே 30 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வந்தேன் என கூறியுள்ளார். இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.