தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கள் வெளியாகி உள்ளன. எம்பிபிஎஸ், இன்ஜினியரிங், நர்சிங் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கட்ஆப் மதிப்பெண் மூலம் எளிதில் மேற்கண்ட படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர். ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தாங்கள் விரும்பும் படிப்பை தேர்வு செய்து படிக்கிறார்கள். பிளஸ்2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் சிக்கி விடைதெரியாமல் தவிக்கின்றனர்.
அடுத்தவர்களின் பயனில்லாத ஆலோசனையை பின்பற்றி எதிர்காலத்தை தொலைத்து விடுபவர்களும் உண்டு. குறைந்த மார்க் காரணமாக பலர் மேற்படிப்பை தொடராமல் விட்டு விட்டு கிடைத்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் அமைவதில்லை. படிப்பில் சுமாராக விளங்குபவர்களிடம் தொழில் ரீதியான திறமைகள் ஒளிந்து கிடக்கும். எனவே மதிப்பெண் குறைந்தவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தொழில் ரீதியான படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இதன் மூலம் உயர்ந்த நிலையை அடையலாம். தற்போது தொழில் ரீதியான படிப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. அதோடு அதிக ஊதியத்தையும் அள்ளிக்கொடுக்கின்றன.
ஏவியேஷன், ஷிப்பிங், டெலிகாம், மீடியா, என்ஜிஓ, பிபிஓ, ஐடி, இன்சூரன்ஸ், பிசியோதெரபி, ஆப்டோமெட்ரி, எக்ஸ்ரே டெக்னீஷியன், செரிகல்ச்சர், பால்வள மேலாண்மை, விளையாட்டு மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் அளிக்கப்படும் டிப்ளமோ படிப்புகளான டிராப்ட்ஸ்மேன்ஷிப், டாக்சேஷன், டிடிபி, லேபர் பிராக்டிஸ், கம்பெனி செகரட்டரி போன்ற தொழில் ரீதியான படிப்புகள் வாழ்வை வளமானதாக்கும். இத்துறைகளில் மதிப்பெண்களை விட மாணவர்களின் தனித்திறமைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook