இமயமலையை உடைத்து ரயில்பாதை அமைக்க சீனா முடிவு
பீஜிங்: திபெத்தையும் நேபாளத்தையும் ரயில் மூலம் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக இமயமலையை குடைந்து ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை தயாரித்துள்ளது. இது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.லாமாக்களின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத்தை சீனா கைப்பற்றியது. அதை தொடர்ந்து திபெத் மக்களுடனான உறவை வளர்க்கும் நோக்கில் சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து திபெத்துக்கு ரயில்பாதை போடப்பட்டது. தற்போது இந்த ரயில்பாதையை நேபாளம் வரை விரிவு படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. நேபாளத்தில் சீன ஆதரவு பெற்ற மாவோயிஸ்ட்களின் கை ஓங்கியிருப்பதை தொடர்ந்து திபெத்தையும் நேபாளத்தையும் ரயில் மூலம் இணைக்கும் திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது.
இதற்காக நேபாளத்தில் உள்ள இமய மலையை உடைத்து குகை பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நேபாள அரசு இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 2020ம் ஆண்டில் இந்த திட்டம் முடிவுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு குயிங்ஹாய்-லாசா ரயில்பாதையை நேபாள எல்லை வரை விரிவுபடுத்த சீனா திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றி இமயமலையை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்த திட்டத்தை சீன அரசு கைவிட்டுவிட்டு தற்போது இமயமலை வழியாக பாதை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. திபெத் நேபாளம் வழியாக இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை விரிவு படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.